பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் 13 சதவீதம் உயர்ந்து ரூ.5,532 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் லாபம் ரூ.4,904 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருவாய் ரூ.36,214 கோடியிலிருந்து ரூ.38,185 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி வருவாய் ரூ.31,872 கோடியிலிருந்து ரூ.34,585 கோடியாக அதிகரித்துள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ.7,227 கோடியிலிருந்து ரூ.7,532 கோடியாக உயர்ந்துள்ளது.
வங்கியின் மொத்த வாராக்கடன் விகிதம் 3.45 சதவீதத்திலிருந்து 2.55 சதவீதமாகக் குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் விகிதமும் 0.36 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாகச் சரிந்துள்ளது.
வாராக்கடன் உள்ளிட்ட எதிர்பாராத இழப்புகளுக்கான ஒதுக்கீடு ரூ.643 கோடியிலிருந்து ரூ.97 கோடியாகக் குறைந்துள்ளது.
வாராக்கடன் ஒதுக்கீட்டு பாதுகாப்பு விகிதம் 97.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கியின் மூலதனப் போதுமான விகிதமும் 17.19 சதவீதத்திலிருந்து 17.95 சதவீதமாக அதிகரித்துள்ளது.